மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்று அழைக்கப்படும் ஏகாம்பரேஸ்வரர்–காமாட்சி கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் மயிலாப்பூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. பொ.ஊ. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில் 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது. வள்ளுவரின் பிறப்பிடமாக பாரம்பரியமாக நம்பப்படும் இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும். சிலர் இதை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர். தமிழ் மொழி ஆர்வலர்களின் சந்திப்புக்கான இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோவிலை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது.




